en banner

Japan Research1ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பான் கடற்றொழில் ஆராய்ச்சி மற்றும் கல்வி முகவரகத்தின் (Japan Fisheries Research and Education Agency - FRA) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 02ஆம் திகதி ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது.

ஜப்பான் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் முன்னணி ஆய்வு நிறுவனமான FRA, இலங்கையுடன் இத்தகைய கொள்கை அளவிலான கலந்துரையாடலில் ஈடுபட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தச் சந்திப்பில் FRA நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹிடேகி நிகைடோ (Mr. Hideki Nikaido), துணைத் தலைவர் புஜி டெட்சுவோ (Mr. FUJII Tetsuo) மற்றும் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி ரெனா ஷிபாடா (Ms. SHIBATA Rena) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து அமைச்சரினால் கவனம் செலுத்தப்பட்டது :

1 . நவீன படகு வடிவமைப்புகள் : எரிபொருள் செலவைக் குறைக்கக்கூடிய (Fuel Efficiency) மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்கக்கூடிய நவீன மீன்பிடிப் படகுகளை வடிவமைப்பதற்காக ஜப்பானின் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ளுதல்.

2. நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு : நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையின் புதிய போக்குகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளை (Product Development) சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான ஆராய்ச்சி உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல்.

3. உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி : கடல் வளங்கள் சார்ந்த உயிரித் தொழில்நுட்ப (Biotechnology) ஆய்வுக்காக இரு நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

இந்த விடயங்கள் தொடர்பில் கூட்டு ஆய்வுகளை (Joint Research) மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தருமாறு ஜப்பானிய விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அமைச்சர் இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் தேவைகள் குறித்த விரிவான திட்ட வரைவை (Detailed Draft Proposal) விரைவில் சமர்ப்பிக்குமாறு FRA நிறுவனம் இதன்போது கேட்டுக்கொண்டதுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் எதிர்கால ஒத்துழைப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.

இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Japan Research2

Japan Research4

Japan Research6

Japan Research7

Japan Research8

Japan Research9

Japan Research10

சமீபத்திய செய்திகள்

Youtube