en banner

JICA1ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (Island States Ocean Summit - ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது.

ஜைகா நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் ஹரா ஷொஹெய் (Mr. Shohei HARA) தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், குறித்த நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் கொமோரி தகாஷி (Mr. Takashi KOMORI) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கையின் கடற்றொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக, கடற்றொழில் அமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இலங்கையின் கடற்றொழில் துறையில் நிலவும் தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட குறைபாடுகளைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘விசேட பகுப்பாய்வு அறிக்கை’ குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த அறிக்கையின் மூலம் கண்டறியப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில், புதிய அபிவிருத்தி முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக எதிர்காலத்தில் ஜைகா (JICA) தொழில்நுட்பக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஜப்பான் தரப்பு இதன்போது இணக்கம் தெரிவித்தது.

கடந்த பல வருடங்களாக செயல்பாட்டு ரீதியாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் கிரிந்த மீன்பிடித் துறைமுகம் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்தத் துறைமுகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வை வழங்குவதற்கு ஜைகா நிறுவனம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தூதுக்குழுவினர் அமைச்சரிடம் உறுதியளித்தனர்.

அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய உடனடி உதவிகளுக்கு அமைச்சர் தமது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இலங்கை நாடாளுமன்ற வளாகம், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை மற்றும் நாட்டின் தொலைக்காட்சி ஊடகத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளையும் அமைச்சர் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

JICA3

JICA4

JICA5

JICA6

JICA7

JICA8

JICA9

சமீபத்திய செய்திகள்

Youtube