வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (02) முற்பகல் 10.30 இற்கு வெளியிடப்பட்ட விசேட வானிலை அறிக்கையின்படி, அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிதி கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அவதானமிக்கது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகள் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார் :
"அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கூறப்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். தற்போது கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பாகக் கரை திரும்ப வேண்டும். அத்துடன், எந்தவொரு மீன்பிடி நடவடிக்கையின் போதும் உயிர் காக்கும் அங்கிகளை (Life Jackets) அணிந்திருப்பது கட்டாயமாகும் என்பதையும் நான் விசேடமாக நினைவூட்டுகிறேன்"
நிலவும் இந்த ஆபத்தான வானிலை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தங்களது உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தையும் வலியுறுத்துகிறது.





