11 July 2026
நன்னீர் இறால் வளர்ப்பில் முன்னேற்றம் : 'கூண்டு முறை' மூலம் இறால்களின் உயிர்வாழும் வீதம் 55 சதவீதமாக அதிகரிப்பு - மொனராகலை கிரிஇப்பன் குளம் மூலம் வெற்றிகரமான உற்பத்தி
ஜனாதிபதியினால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நன்னீர் இறால் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் விசேட திட்டமொன்றின் ஊடாக, நாட்டின் நன்னீர் இறால் உற்பத்தியை சாதனை அளவில் அதிகரிக்க முடிந்துள்ளதாக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
குறித்த நிதி ஒதுக்கீட்டில் 175 மில்லியன் ரூபாய் யாழ்ப்பாணம் சுள்ளிபுரத்தில் கடல் அட்டை குஞ்சுப்பொரிப்பகம் ஒன்றை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 25 மில்லியன் ரூபாய் நிதி நன்னீர் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான சோதனை அடிப்படையிலான முன்னோடித் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள 25 நீர்நிலைகளில் கூண்டு முறையில் இறால்களை வளர்த்து விடுவிக்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான வெற்றியாக நன்னீர் இறால்களின் உயிர்வாழும் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளமையைக் குறிப்பிடலாம். இதுவரை நடைமுறையிலிருந்த பாரம்பரிய முறையின்படி, இறால் குஞ்சுகளை நேரடியாக நீர்நிலைகளில் விடுவிக்கும் போது அவற்றின் உயிர்வாழும் வீதம் 1 முதல் 3 சதவீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. எனினும், ‘சீநோர்’ (Cey-Nor) நிறுவனம் தயாரித்த விசேட வட்ட வடிவ வலைக் கூண்டுகளுக்குள் இறால் குஞ்சுகளை ஆறு வார காலம் வளர்த்த பின்னர் நீர்நிலைகளில் விடுவிக்கும் புதிய முறையின் ஊடாக, அந்த வீதத்தை 40 முதல் 55 சதவீதம் வரை அதிகரிக்க முடிந்துள்ளது.
இந்த சோதனை முறையிலான வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக, மொனராகலை கிரிஇப்பன் குளம் (Kiriibban Wewa) நீர்நிலையில் கூண்டு முறையில் இறால்களை வளர்த்து விடுவிக்கும் திட்டம் 55 சதவீதம் உயிர்வாழும் வீதத்தைப் பதிவு செய்து தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கிரித்தலே, அக்கராயன்குளம் மற்றும் புதுமுறிப்புக் குளம் ஆகிய நீர்நிலைகளிலும் இவ்வாறான வெற்றிகரமான முடிவுகளைப் பெற முடிந்துள்ளது. இந்த வாரத்திற்குள் அனுராதபுரம் மகா கனதராவ மற்றும் நாச்சாதுவ ஆகிய நீர்நிலைகளிலும் இவ்வாறு வளர்க்கப்பட்ட இறால்கள் விடுவிக்கப்படவுள்ளன.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ், தனியார் துறையின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டத்தின் மூலம் 300 கிராமுக்கும் அதிக எடையுடைய, உயர்தர நன்னீர் இறால்களை ஏற்றுமதி சந்தைக்கும் உள்நாட்டு முன்னணி சுற்றுலா விடுதிகளுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணம், அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களின் மீனவச் சங்கங்கள் இதில் தீவிரமாகப் பங்களிப்பு செய்து வருவதுடன், இதன் மூலம் மீனவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான வழிகளில் ஒன்றாக நன்னீர் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
Share








