7 July 2026

1,500 மீன்பிடிப் படகுகளுக்கு படகு கண்காணிப்பு முறைமைகளை (VMS) பொருத்துவதற்கான முழுமையான செலவையும் அரசாங்கமே ஏற்கிறது: கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், அனர்த்தங்களின் போது கடற்றொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட விசேட அமைச்சரவை தீர்மானம்!

சட்டவிரோத மீன்பிடி (IUU) மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிகமாக, ஆழ் கடலில் படகு ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானால் அல்லது இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டால் கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக குறித்த படகு இருக்கும் இடத்தை துல்லியமாக அடையாளம் காணும் நோக்கிலும், நாட்டின் 1,500 மீன்பிடிப் படகுகளுக்கு படகு கண்காணிப்பு முறைமைகளை (VMS) பொருத்துவதற்கான முழுமையான செலவை அரசாங்கமே ஏற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் சூரை ஆணைக்குழுவின் (IOTC) விதிமுறைகளுக்கு அமைவாக, சர்வதேச கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு மீன்பிடிப் படகும் ‘படகு கண்காணிப்பு முறைமையின்’ (VMS) ஊடாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவது கட்டாயமாகும். தற்போது நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 5,200 பலநாள் மீன்பிடிப் படகுகளில் சுமார் 4,200 படகுகளுக்கு இம்முறைமைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 1,500 படகுகள் கண்காணிப்பு முறைமைகள் இன்றி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இப்படகுகளில் 34 அடிக்கும் மேற்பட்ட நீளமுடைய 400 படகுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழையும் இயலுமை உள்ளதால், அவற்றின் செயற்பாடுகளை முறையான கண்காணிப்புக்கு உட்படுத்துவதன் முக்கியத்துவத்தை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், எஞ்சிய 1,100 படகுகள் தொழில்நுட்ப ரீதியாக பலவீனமான மட்டத்தில் காணப்பட்டாலும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வத்தன்மையை உறுதி செய்வது அத்தியாவசியமானதாகும்.

இதற்கமைவாக, அமைச்சரின் யோசனைக்கமைய, குறித்த 1,500 படகுகளுக்கும் படகு கண்காணிப்பு முறைமைகளை (VMS) பொருத்துவதைக் கட்டாயமாக்குவதற்கும், அதற்கான முழுமையான செலவை கடற்றொழிலாளர்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக அரசாங்கமே ஏற்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் மூலம், சர்வதேச கடற்பரப்பில் நாட்டின் கடற்றொழில் துறை மீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறைத்துக் கொள்வதற்கும், போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களால் மீன்பிடிப் படகுகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கும் முடியுமென அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share

Latest News