07 July 2026
அலங்கார மீன் வளர்ப்புத் தொழிற்துறையை மேம்படுத்த 'டிட்வா' நிவாரண உதவிகள் வழங்கல் : ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய தாய் மீன்களை இறக்குமதி செய்ய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தல்
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு அளவிலான அலங்கார மீன் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று (6) தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் (NAQDA) நடைபெற்றது.
இதன்போது, கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 28 அலங்கார மீன் உற்பத்தியாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டதுடன், ஒட்டுமொத்தமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 83 பயனாளிகளுக்காக 4.65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நுவரெலியா, மாத்தளை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 40 உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது அமைச்சர் ஒரு மிக முக்கியமான கொள்கை முடிவை அதிகாரிகளுக்கு அறிவித்தார். அதன்படி, நாட்டின் அலங்கார மீன் வளர்ப்புத்துறையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதுப்பிப்பதற்காக, இலங்கையில் காணப்படாத புதிய அலங்கார மீன் வகைகளின் உயர்தர தாய் மீன்களை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். பல வருடங்களாக புதிய மீன் வகைகள் அறிமுகப்படுத்தப்படாத பின்னணியில், இதன் ஊடாக உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு தங்களது உற்பத்திகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இந்த நிகழ்வில் கருத்துரைத்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் :
“டிட்வா சூறாவளி காரணமாக அலங்கார மீன் வளர்ப்புத் தொழிலுக்கு சுமார் 307 மில்லியன் ரூபாய் அளவிலான பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு மேலதிகமாக, உலகளாவிய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்ததால் எமது உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும், தற்போதைய அரசாங்கம் என்ற வகையில் நாம் சவால்கள் அனைத்தையும் முகாமைத்துவம் செய்து, மக்களுக்கு உறுதியளித்தபடி இந்தத் தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இலங்கையை உலகின் பிரதான அலங்கார மீன் வர்த்தக மையமாக மாற்றுவதே எமது இலக்காகும்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Share











