05 October 2026
இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA). சேவையை வலுப்படுத்த புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள்...
இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய அதிகாரிகள் 25 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்களும் 33 பேருக்குப் பயிற்சி நியமனக் கடிதங்களும் வழங்கும் நிகழ்வு இன்று (05) காலை இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டார்.
இதன்போது புதிதாக, 03 பணிப்பாளர்கள் , 19 நீர்வாழ் உயிரின செய்கையாளர் (Aquaculturists) , ஒரு சிவில் பொறியியலாளர், மாவட்ட நீரியல்வாழ் உயிரின செய்கை பரவலாக்க உத்தியோகத்தர் 02 பேர் ஆகியோருக்கு அமைச்சரின் கரங்களால் நிரந்தர நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் இவ்வேளையில் அதன் முன்னேற்றத்தை மக்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார். “இன்று நியமனம் பெறும் அனைவரும் மிகவும் முறையான வகையில், அவர்களின் திறமை மற்றும் ஆற்றலின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகின்றன. நிறுவனத்திலுள்ள ஏனைய வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நாம் ஒரு விசேட வேலைத்திட்டத்தைத் தயாரித்துள்ளோம்,” என அவர் கூறினார்.
அரசாங்கத்தின் பொருளாதார முன்னேற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்: “நாம் ஏற்கெனவே மக்களுக்குப் பெருமளவிலான எரிபொருள் மானியத்தை வழங்கி வருகிறோம். குறிப்பாக, மீனவ மக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்குகிறோம். இன்று பொருளாதாரத்தை முன்பை விட சிறந்த நிலைக்குக் கொண்டுவர எம்மால் முடிந்துள்ளதாலேயே இவ்வாறான நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டளவில் எமது வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை அமெரிக்க டொலர் 600 மில்லியன் வரை அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
மீன்பிடித் தொழிலின் எதிர்காலம் குறித்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “நீலப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனில், மீன்பிடித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறால் வளர்ப்பு போன்ற பாரிய தொழில்களைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் தயாரிக்க வேண்டும். அதனுடன் இணைந்ததாக டிஜிட்டல்மயமாக்கலுக்கான வேலைத்திட்டத்தையும் நாம் தயாரித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எமது அரசாங்கத்தின் கடந்த வரவு செலவுத் திட்டங்களைப் போலவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.
இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார். “இங்கு இருப்பது உத்வேகம் மிக்க இளைஞர் குழாம். ஆகவே, இந்நிறுவனத்தை தற்போதுள்ள நிலையிலிருந்து மேலும் உயர்ந்த நிலைக்கு இவர்கள் கொண்டு வருவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். 06 வார கால பயிற்சியின் பின்னரே இன்று உங்களைச் சேவையில் இணைத்துக்கொள்கிறோம். அமைச்சர் என்ற வகையில் உங்கள் அனைவருக்காகவும் நான் துணை நிற்கிறேன். எனவே, உங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றுங்கள். உங்கள் சேவையை நீங்கள் சரியாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்வீர்கள் என்று அரசாங்கமாக நாம் நம்புகிறோம்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கங்கள் அமைச்சின் முன்னேற்றத்துக்காக அல்லாமல் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே செயற்பட்டபோதிலும், தற்போதைய அரசாங்கம் அந்தக் கலாசாரத்தை முழுமையாக மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
அதன்படி, இந்தப் புதிய அதிகாரிகள் நன்னீர் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், உற்பத்தியாளர்கள், மீனவ சமூகங்கள், கிராமிய மீனவ அமைப்புகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட துறையின் பங்குதாரர்களின் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்காக நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர். இந்தப் புதிய ஆட்சேர்ப்பு மற்றும் வழங்கப்பட்ட தொழில்சார் பயிற்சியின் மூலம், இலங்கையின் நன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையின் நவீன தேவைகளுக்கு திறம்பட பதிலளிக்கக்கூடிய வலுவான தொழிலாளர் படையும் செயற்றிறன் மிக்க சேவையும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச, பணிப்பாளர் நாயகம் (விவசாயம்) திருமதி. சீதா வயலட் , இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய, பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜே. எம். அசோகா, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி முகவராண்மையின் தலைவர் திரு. சனத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



















