Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
21 August 2026
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணல் குவியும் பிரச்சினைக்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வுகள்

நீண்டகாலமாக கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் நிலவிவரும் மணல் குவியும் பிரச்சினைக்கு குறுகியகால, நடுத்தரகால மற்றும் நீண்டகால அடிப்படையில் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, கிரிந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், துறைமுகத்தின் செயற்பாடுகளை மீளவும் முறையாக முன்னெடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

1982ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டு பணிகள் நிறைவடைந்த கிரிந்த மீன்பிடித் துறைமுகம், 1986ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான மணல் குவியும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது சுமார் 1,40,000 கன மீற்றர் அளவு மணல் துறைமுகப் பகுதியில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மணலை அகற்றுவதற்காக அரசாங்கத்திற்கு வருடாந்தம் பெருமளவு செலவு ஏற்படுவதுடன், எரிபொருள் உள்ளிட்ட செலவுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே,

“கிரிந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வுகளை வழங்குவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மணல் குவியும் நிலை ஏற்படாத வகையில் நீண்டகால நிலையான தீர்வொன்றை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மீனவர்களின் கருத்துக்களையும், தொழில்நுட்ப நிறுவனங்களின் பரிந்துரைகளையும் கருத்திற்கொண்டு, நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை கட்டம் கட்டமாக முன்னெடுப்போம்,” எனத் தெரிவித்தார்.”


குறுகியகால நடவடிக்கைகள்

தற்போது துறைமுகத்தில் குவிந்துள்ள மணல் அளவில் சுமார் 16,000 கன மீற்றர் அளவான மணலை அகற்றி, திஸ்ஸமஹாராம பிரதேசசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரிந்த துறைமுகத்தில் இயங்கும் பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு தற்காலிக மாற்று வசதியாக ஹம்பாந்தோட்டை மற்றும் கலமெட்டிய மீன்பிடித் துறைமுகங்களை எவ்வித கட்டணமும் இன்றி பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஒருநாள் மீன்பிடிப் படகுகளுக்கு உடனடி தீர்வு

மீனவர்களின் முன்மொழிவுக்கு அமைவாக, கிரிந்த துறைமுகத்தின் நுழைவாயிலை தற்காலிகமாக மூடி, துறைமுகத்திற்குள் குவிந்துள்ள மணலை அகற்றிய பின்னர் மீண்டும் நுழைவாயிலை திறப்பது தொடர்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு சுமார் 2–3 வாரங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அந்தக் காலப்பகுதியில் சிறிய மீன்பிடிப் படகுகளை தற்காலிகமாக வேறு இடங்களில் நிறுத்தி வைக்க மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


நீண்டகாலத் தீர்வாக புதிய துறைமுகம்

கிரிந்த துறைமுகத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அந்தகல இறங்குதுறை மற்றும் நிதன்கல இறங்குதுறை ஆகிய பகுதிகளில் நங்கூரமிடுவதற்கு அல்லது கடல் தடுப்பணையுடன் கூடிய புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறுித்த ஆய்வை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, சிறிய மீன்பிடிப் படகுகள் கரையிறங்கி தமக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் துறை மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் கிரிந்த மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், துறைமுகத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு நீண்டகாலத் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலபத்தி, அதுல வெலந்தகொட மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், கிரிந்த பகுதி மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், கிரிந்த துறைமுகத்தின் மணல் குவியும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பான ஆரம்பகட்ட சட்ட மற்றும் பிராந்திய மட்ட கலந்துரையாடல், பிரதேச செயலகம், கடற்றொழில் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்கேற்புடன் அடுத்த கட்டமாக நடைபெறவுள்ளது.

Latest News