04 August 2026
சீநோர் நிறுவனத்திற்கு 2 இலட்சத்து 34 ஆயிரம் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வெற்றி: மொரிஷியஸ் நாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட "CAPTAIN C" படகை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்
கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கியதால் மூடப்பட வேண்டிய அல்லது தனியார்மயப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்த அரசுக்குச் சொந்தமான சீநோர் (Cey-Nor) நிறுவனம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் ஒரு முக்கிய மைல்கல்லாக, மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறைக்காகத் தயாரிக்கப்பட்ட 55 அடி நீளமான பாரிய மீன்பிடிக் கலனை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
“CAPTAIN C” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன படகின் பெறுமதி 234,000 அமெரிக்க டொலர்களாகும். இது 29 கன மீட்டர் மீன் சேமிப்புத் கொள்ளளவையும், 12,500 லீட்டர் எரிபொருள் கொள்ளளவையும் கொண்டது. மொரிஷியஸ் நாட்டின் ‘Captain C Adventure Offshore Fishing Co-operative Society’ நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சுட்டூ (Mr. Ramesh Chuttoo) அவர்களிடம் இந்தப் படகு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இங்கு விசேட உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைச் சரியான முகாமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டு வர முடியும் என்பதை சீநோர் மற்றும் மீன்பிடிக் கூட்டுத்தாபனம் (CFC) ஆகியன நிரூபித்துள்ளன எனத் தெரிவித்தார்.
“சீநோர் நிறுவனம் புறக்கணிக்கப்பட்ட காலம் இனி முடிந்துவிட்டது. எமது திறமையான ஊழியர்களும் புதிய முகாமைத்துவமும் இணைந்து இன்று சர்வதேச ரீதியான கட்டளைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றனர். அண்மையில் நாம் மேற்கொண்ட நோர்வே விஜயத்தைத் தொடர்ந்து சீநோர் நிறுவனத்திற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அந்நாடு இணங்கியுள்ளது. அதேபோன்று அடுத்த மாதம் நான் மேற்கொள்ளவுள்ள ஜப்பான் விஜயத்தின் மூலமும் நிறுவனத்தை நவீனமயப்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறேன். மொரிஷியஸ் உரிமையாளரின் கோரிக்கைக்கு இணங்க, எதிர்காலத்தில் அந்நாட்டிலும் ஒரு சீநோர் கப்பல் கட்டும் தளத்தை (Boat Yard) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் ஆலோசித்து வருகிறோம். இது எமது அமைச்சிற்கும் நாட்டிற்கும் கிடைக்கும் ஒரு பாரிய வெற்றியாகும்,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வடக்கின் சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு 150 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய படகொன்றைத் தயாரிக்கும் பொறுப்பையும் அமைச்சர் இதன்போது சீநோர் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.
சீநோர் நிறுவனத்தின் தலைவர் வசந்த மான்னப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், 1967 ஆம் ஆண்டு முதல் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள சீநோர் நிறுவனம், இதுவரை 20,000 இற்கும் அதிகமான படகுகளைத் தயாரித்து நாட்டின் படகு கட்டுமானத் துறையில் முன்னணியில் உள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் சீஷெல்ஸ் மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளுக்கும் படகுகளை ஏற்றுமதி செய்து நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தர நிறுவனம் தயாராக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (NARA) தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாரச்சி, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகமது நவ்ராஸ் நாசர் உள்ளிட்ட அமைச்சின் மற்றும் இணைந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Share















