26 July 2026
பங்களாதேஷ் கடல் எல்லைக்கு அடித்துச் செல்லப்பட்ட மாத்தறை மீனவர்கள் இருவரை விரைவாக நாட்டிற்கு அழைத்து வர பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை

கடந்த ஜூன் 19ஆம் திகதி மாத்தறை, தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்குச் சென்று கடலில் காணாமல் போயிருந்த ‘சொமிரச’ (IDAY-A- 0122 KMN) படகில் இருந்த இரு மீனவர்களும் பங்களாதேஷின் சிட்டகொங் (Chittagong) கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடித் தலையீடுகளை மேற்கொண்டுள்ளார்.

32 அடி நீளமான இந்தப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியிருந்தது. அதிலிருந்த ஒரு மீனவர் வேறொரு படகின் மூலம் கரை திரும்பிய போதிலும், படகின் உரிமையாளரான திரு. எஸ். எச். பியசேன (தந்தை) மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த (மகன்) ஆகியோர் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்தனர். படகில் கலன் கண்காணிப்பு முறைமை (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலித் தொகுதி இல்லாமையினால், அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் மேற்கொண்ட பலத்த தேடுதல் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.

கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு அமைய இப்படகு அண்டை நாடு ஒன்றின் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கடற்றொழில் திணைக்களம் மேற்கொண்ட கணிப்பிற்கு அமைய, வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன் விளைவாக, படகு பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த இந்த இரு மீனவர்களும் தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பில் உள்ளனர்.

இவ்விடயம் குறித்து அறிந்தவுடன் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்தவிடம், பங்களாதேஷிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.

பங்களாதேஷில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வாராந்த விடுமுறை தினங்கள் என்பதால் ஆவணங்களைத் தயாரிப்பதில் தாமதம் நிலவியது. இருப்பினும், வேலை நாளான இன்று (26 – ஞாயிற்றுக்கிழமை) முதல் அவர்களுக்குத் தேவையான விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் ஏனைய சட்டபூர்வ அனுமதிகளைத் தூதரகம் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதி அமைச்சரின் நேரடித் தலையீட்டின் மூலம் இன்னும் சில தினங்களில் இந்த மீனவத் தந்தையும் மகனும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share

Latest News