17 July 2026
நீர்கொழும்பு ஏரியைப் பாதுகாக்க கூட்டுப் பொறிமுறை மற்றும் குட்டிதூவ பகுதியை கருவாடு உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே

கம்பஹா மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (17) முற்பகல் நீர்கொழும்பில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் தொழிலாளர் துறை பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், நீர்கொழும்பு ஏரி மற்றும் மாவட்டத்தின் கடற்றொழில் சார் பிரச்சினைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, நீர்கொழும்பு ஏரியைப் பாதுகாப்பதற்காக அதன் எல்லைகளை ஜி.பி.எஸ் (GPS) அடையாளக் குறிகளுடன் வரைபடமாக்கி, அதனை விரைவாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஏரியின் சூழலைப் பாதிக்கும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க பிரதேச செயலகங்கள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸார் உள்ளடங்கிய ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்க இதன்போது இணக்கம் காணப்பட்டது.

பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
“நீர்கொழும்பு மற்றும் குட்டிதூவ பகுதிகளில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் கருவாடு தொழில் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றன. அவர்களின் உற்பத்திகளை மிகவும் சுகாதாரமான முறையிலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்த்துவதற்காக, குட்டிதூவ பகுதியை ஒரு விசேட ‘உற்பத்தி கிராமமாக’ அபிவிருத்தி செய்ய எமது அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான பயிற்சித் திட்டங்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAO) இணைந்து ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.”

மேலும், நீர்கொழும்பு ஏரிக்குள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் கடற்றொழில் திணைக்களம், பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஊடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். திக்ஓவிட்ட மற்றும் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை விரைவுபடுத்தவும், வத்தளை, ஹேந்தலை மற்றும் கேபுங்கொடை பகுதிகளில் புதிய மீன்பிடி இறங்குதுறைகளை (Landing Sites) அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கைகளை உடனடியாகக் கோரவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) லலிந்த கமகே, கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள், நாரா (NARA), நெக்டா (NAQDA) நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

Share

Latest News