16 July 2026
இறால் வளர்ப்பை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு பிரித்தானியாவின் நவீன தொழில்நுட்பம்: மாரவிலயில் உற்பத்தியாளர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
இலங்கையின் இறால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி பண்ணைகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தி அதிக உற்பத்தியை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையின் இறால் உற்பத்தியாளர்களுக்கு நவீன முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் விசேட பயிலரங்கொன்று இன்று (16) மாரவில, ‘கிளப் பாம் பே’ நட்சத்திர விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ‘கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டம் (OCPP) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கம், இறால் வளர்ப்பில் நோய் பரவுவதைத் தடுக்கும் ‘உயிரியல் பாதுகாப்பு’ (Biosecurity) முறைகளை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். பிரித்தானியாவின் ‘புளூ பிளானட்’ (Blue Planet) நிதியத்தின் ஊடாகச் செயற்படுத்தப்படும் இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், எமது நாட்டு மீனவர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் தேவையான தொழில்நுட்ப அறிவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இங்கு கருத்துரைத்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய, இறால் வளர்ப்பு எமது நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஒரு தொழிலாக இருக்கின்றபோதிலும், அவ்வப்போது ஏற்படும் நோய் காரணமாக உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி நிர்க்கதியாகி விடுவதாகக் குறிப்பிட்டார்.
“நோய் எற்பட்டதன் பின்னர் சிகிச்சை அளிப்பதை விட, நோய் வராமல் எவ்வாறு பாதுகாப்பது என்பதை உற்பத்தியாளர்களுக்கு கற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அதற்காக கடந்த மாதம் நாம் அறிமுகப்படுத்திய புதிய ‘கைபேசி செயலி’ (Mobile App – SIIS) மூலம், தற்போது எந்தவொரு உற்பத்தியாளரும் தமது வளர்ப்புப் பண்ணை குறித்த தகவல்களை வழங்கவும், நோய்கள் குறித்த ஆரம்பகால எச்சரிக்கைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அறிவை பெற்றிருப்பதை விட, அதனை களத்தில் நடைமுறைப்படுத்துவதே மிக முக்கியமானது,” என தலைவர் மேலும் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் இந்தத் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக பிரித்தானியாவின் ‘Cefas’ நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசாங்கத்திற்கும் இதன்போது அவர் நன்றி தெரிவித்தார். பிரித்தானியாவுடனான இந்த ஒத்துழைப்பின் ஊடாக எமது நாட்டின் இறால் வளர்ப்பை அண்டை நாடுகளுக்கும் முன்மாதிரியாக அமையும் வகையில் மிகவும் வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசாங்கத்தின் OCPP திட்டத்தின் நிபுணர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் விலங்கு நோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (CAADDR) நிபுணர்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) அதிகாரிகள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இறால் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Share







