14 July 2026
இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத் துறையை மேம்படுத்த FAO மற்றும் சீனாவிடமிருந்து 2 மில்லியன் டொலர் பெறுமதியிலான கூட்டுத் திட்டம் ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் சீன அரசாங்கத்தின் “தெற்கு-தெற்கு ஒத்துழைப்புத் திட்டம்” (FAO-China South-South Cooperation) ஆகியவற்றின் கீழ் செயல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்த பங்குதாரர்களின் ஆரம்பகட்ட கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச அவர்களின் தலைமையில் இன்று (14) அமைச்சில் நடைபெற்றது.

“மேம்படுத்தப்பட்ட நீர்வாழ் உயிரினங்களின் ஆரோக்கிய மேலாண்மை மற்றும் நடைமுறைகள் மூலம் நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு உற்பத்தியை ஊக்குவித்தல்” என்ற கருப்பொருளின் கீழ் இந்தத் திட்டம் 2027ஆம் ஆண்டிலிருந்து மூன்று வருட காலத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 02 மில்லியன் அமெரிக்க டொலர் (600 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு மேலதிகமாக தன்சானியாவும் இந்த ஒத்துழைப்புத் திட்டத்தின் பங்காளராகச் செயல்படுகிறது.

இதன்போது ஆரம்ப உரை ஆற்றிய அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச, நாட்டின் நீர்வாழ் உயிரின வளர்ப்பானது வெறும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அப்பால் சென்று, அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் நட்புமிக்க ஒரு தொழிற்துறையாக மாறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

“குறிப்பாக இறால் தொழில்துறையில், நோய் பரவல் காரணமாக கடந்த காலத்தில் நாம் பெரும் உற்பத்தி இழப்புகளையும் ஏற்றுமதி வாய்ப்புகளையும் இழந்தோம். அந்த நிலமையைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், முறையான தேசியக் கொள்கையொன்றும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நோய் அறிக்கை முறையொன்றும் நமக்கு இன்றியமையாததாகும். பத்துலுஓயாவில் அமைந்துள்ள எமது மேம்பட்ட ஆய்வக அமைப்பின் சேவைகளும் தொழில்நுட்ப அறிவும் நேரடியாக உற்பத்தியாளர்களை சென்றடைய வேண்டும்,” என செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் 04 முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது:

1.⁠ ⁠டிஜிட்டல் மயமாக்கல் : காகிதப் பயன்பாடு இன்றி, பண்ணைகளைப் பதிவு செய்தல், நோய் அறிக்கை செய்தல் மற்றும் உற்பத்தித் தரவுகளைக் கண்காணிப்பதற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல்.

2.⁠ ⁠முன்னெச்சரிக்கைகள்: காலநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு மற்றும் நீரின் தரம் மாறுபடுதல் குறித்து உற்பத்தியாளர்களுக்கு உடனடியாகத் தகவல் வழங்கும் முறைமையொன்றை நிறுவுதல்.

3.⁠ ⁠உயிர்ப் பாதுகாப்பு (Biosecurity): சிறு அளவிலான உற்பத்தியாளர்களினால் தாங்கிக்கொள்ளக்கூடிய மற்றும் நடைமுறைச் சாத்தியமான உயிர்ப் பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல்.

4.⁠ ⁠சர்வதேச அறிவுப் பரிமாற்றம்: சீனா போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்பில் முதிர்ச்சியடைந்த நாடுகளின் அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளுதல்.

இந்த நிகழ்வில் FAO தலைமையகத்தின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி சின்ஹுவா யுவான் (Dr. Xinhua Yuan), கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களம், பேராதனைப் பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம், இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் (DAPH), NAQDA மற்றும் NARA ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள், சீனா மற்றும் FAO அமைப்பின் சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Share