10 July 2026
சீஷெல்ஸில் வசிக்கும் இலங்கை கடற்றொழில்த்துறை வர்த்தகர்களுக்கும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு : தசாப்தத்தின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத்தியஸ்தம்

சீஷெல்ஸ் (Seychelles) நாட்டில் நடைபெறும் தெற்கு இந்தியப் பெருங்கடல் நீரியல்வள ஒப்பந்த (SIOFA) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்களுக்கும், சீஷெல்ஸின் கடற்றொழிற்துறையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கை வர்த்தக சமூகத்தினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெற்றது.

சீஷெல்ஸுற்கான இலங்கையின் பதில் தூதுவர் மனிஷா பி. பெரேரா அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில், திணைக்களத்தின் பணிப்பாளர் நுவன் குணவர்தன அவர்களும் கலந்துகொண்டார். சுமார் பத்து வருடங்களின் பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்காக சீஷெல்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இதன்போது உரையாற்றிய பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையில் உருவாகியுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வர்த்தக சமூகத்தினருக்கு விளக்கமளித்தார். அத்துடன், சீஷெல்ஸ் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இலங்கையிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் வர்த்தகர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

இந்த வர்த்தக சமூகத்திற்கும் கடற்றொழில் திணைக்களத்திற்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்ட புதிய தகவல் தொடர்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதற்கும், அவர்களுக்கு தேவையான எந்தவொரு ஆதரவையும் விரைவாக வழங்குவதற்கு தூதரகத்தின் ஊடாக மத்தியஸ்தம் வகிப்பதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக பணிப்பாளர் நாயகமும் பதில் தூதுவரும் இங்கு உறுதியளித்தனர்.

Share

Latest News