1 July 2026
கடற்றொழில் தொழில்துறையை நவீனமயமாக்குவதற்கும் இளைஞர்களை வலுவூட்டுவதற்கும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஜெர்மனியின் DVV International நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் விசேட ஒப்பந்தம்
இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையின் எதிர்காலத்தை வலுப்படுத்துதல், இளைஞர்களை இத்துறைக்குள் ஈர்த்தல் மற்றும் நவீன தொழிற்பயிற்சிகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கும் ஜெர்மனி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இயங்கும் DVV International நிறுவனத்திற்கும் இடையில் விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்றைய தினம் (30) கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த மற்றும் DVV International நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சொன்ஜா பெலேட் (Ms.Sonja Belete) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், நீள தூண்டில் (Long-line) மீன்பிடித் தொழில் முறைக்கு இளைஞர்களை வழிநடத்தி, அவர்களுக்கு நவீன தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டின் பலநாள் மீன்பிடித் தொழிலை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதுடன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்து பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தேசிய தொழிற்துறை தகைமைச் (NVQ) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, கடற்றொழில் திணைக்களத்தின் பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கு DVV International நிறுவனத்தினால் சில கணினிகளும் திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்சார் திறன்களுடன் கூடிய திறமையான மனித வளத்தை உருவாக்குவதன் மூலம், நாட்டின் கடற்றொழில் தொழிற்துறையின் நிலைபேண்தகு மேம்பாட்டை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பணிப்பாளர் (விசாரணை, பயிற்சி மற்றும் சோதனை) எல். ஜி. ஆர். இசுரானி, பிரதம கணக்காளர் ஆர்.டி.ஆர்.எஸ்.ராஜபக்ஷ, உதவிப் பணிப்பாளர் (விசாரணை) எச். நவோத் விஜேதுங்க, சட்ட உதவி உத்தியோகத்தர் டபிள்யூ.ஏ.டி.பி.டி.வனிகசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Share

