வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ‘REVIVE’ (Regional Empowerment through Vibrant, Inclusive and Viable Economies) திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் இரண்டாம் கட்டத் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச தலைமையில் இன்று (30) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உலக வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட நிபுணர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.
இதன்போது ‘REVIVE 1’ திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட திருகோணமலை – கொட்பே (Cod Bay) மீன்பிடித் துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் – குருநகர் (Gurunagar) மீன்பிடி கிராமம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நான்கு மாதங்களுக்குள் அவற்றை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய முன்மொழிவுகள் மற்றும் இலக்குகள்:
* கொட்பே (Cod Bay) மீன்பிடித் துறைமுகம்: துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் சிலிப்வே (Slipway) என்பவற்றை மறுசீரமைத்தல், நவீன குளிரூட்டும் கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட மீன் பதப்படுத்தும் நிலையங்களுக்காக 27 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்தல்.
* குருநகர் (Gurunagar) மீன்பிடி கிராமம்: 3,500 மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரு வழிப்பாதையினைக் கொண்ட பிரவேச வீதியை நிர்மாணித்தல், நவீன மீன் ஏல விற்பனை மண்டபம் மற்றும் சுகாதாரமான கருவாடு வாட்டும் தளங்கள் (Drying platforms) என்பவற்றை நிறுவுதல்.
இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட மிக முக்கியமான விடயம் ‘REVIVE 2’ திட்டத்திற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதாகும். இதன் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி கடல் பாசி (Seaweed), கடல் அட்டை (Sea Cucumber), நண்டு (Mud Crab), Sea Bass மற்றும் இறால் (Shrimp) வளர்ப்பிற்கான பெறுமதி சேர்க்கும் சங்கிலித்தொடரை பலப்படுத்தவும், அதற்கான நீர்வாழ் உயிரின வளர்ப்பு வலயப்படுத்தல் திட்டங்களை (Aquaculture Zoning) உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக, கடல் பாசி வளர்ப்புக்கான சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுடன் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் இங்கு விசேடமாக விளக்கமளிப்பட்டது.
பாரம்பரிய நிலையில் காணப்படும் இந்நாட்டின் கடற்றொழில் துறையை கைத்தொழில் மயமாக்கப்பட்ட மற்றும் தரவுகளின் அடிப்படையிலான (Data-driven) முன்னேறிய ஒரு துறையாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுணுஆரச்சி, நாரா (NARA) நிறுவனத்தின் தலைவர் சனத் ஹெட்டியாரச்சி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Share
Ministry of Fisheries,
New Secretariat, Maligawatta,
Colombo 10,
Sri Lanka.
Email : info@fisheries.gov.lk
+94 112 446 183
+94 112 446 184
Views
1556091
Last Update :
02 July 2026