23 June 2026
காணாமல் போன ‘IDAY-A- 0122KMN’ மீன்பிடிப் படகைத் தேடுவதற்கு தெற்கு கடற்பரப்பிலுள்ள வர்த்தகக் கப்பல்களின் உதவியும் நாடப்படுகிறது : கடற்படை, விமானப்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன
இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகுகளில், 2,500 முதல் 3,000 வரையிலான படகுகளும், சுமார் 10,000 சிறிய படகுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கடற்பரப்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கமைய குறைந்தபட்சம் 30,000 வரையான மீனவர்கள் தொடர்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபடுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
கடந்த ஜூன் 19ஆம் திகதி மாத்தறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ‘IDAY-A- 0122KMN’ என்ற படகு, இயந்திரக் கோளாறு காரணமாகக் காணாமல் போனமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே பணிப்பாளர் நாயகம் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார்.
குறித்த படகில் எந்தவொரு வானொலி செய்திப் பரிமாற்றக் கருவியோ (Radio Communication) அல்லது படகு கண்காணிப்பு அமைப்போ (VMS/AIS) இல்லாததன் காரணமாக, அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து சுசந்த கஹவத்த மேலும் தெளிவுபடுத்துகையில்:
“படகை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் KA 360 மற்றும் KA 350 கண்காணிப்பு விமானங்களும், கடற்படையின் P 485, P 410 மற்றும் ‘சிதுரள’ என்றழைக்கப்படும் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தவிர்ந்து கொழும்பு கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) ஊடாக, தெற்கு கடற்பரப்பில் பயணிக்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கும் இது குறித்த செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. அத்தகையதொரு படகு ஆபத்தில் சிக்கியிருப்பதை அவதானித்தால், உடனடியாக உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பணிப்பாளர் நாயகம் விசேட வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்:
கடற்றொழிலுக்குச் செல்வதற்கு முன்னர், ஒவ்வொரு படகிலும் தொடர்பாடல் கருவிகள் மற்றும் படகு கண்காணிப்பு அமைப்புகள் (VMS) பொருத்தப்பட்டு, அவை முறையாக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடலில் இருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்காக்கும் அங்கிகளை (Life Jackets) அணிந்திருப்பது கட்டாயமாகும்.
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் ஆபத்தை எதிர்கொண்டதுடன், முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததால் அவர்களில் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், நிலவும் வானிலை நிலைமைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், தங்களது உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாத்துக் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களம் ஒட்டுமொத்த மீனவ சமூகத்திற்கும் மீண்டும் வலியுறுத்துகிறது.
Share