குருநாகல் நன்னீர் கடற்றொழில் துறையில் பாரிய முன்னேற்றம்: பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையிலான கூட்டத்தில் பாராட்டு

குருநாகல் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் ரத்ன கமகே, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), நாரா (NARA) நிறுவனம், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் கூட்டு முயற்சியினால் கடந்த குழு கூட்டத்தில் இனங்காணப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் தற்போது வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாக விசேடமாக வலியுறுத்தினார். எஞ்சியுள்ள பிரச்சினைகளையும் துரிதமாகத் தீர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், நிறுவனங்களுக்கு இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பை இங்கு விசேடமாகப் பாராட்டினார்.

மேலும், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், அரச நிறுவனங்கள் மற்றும் மீனவ சங்கங்கள் ஒரு குழுவாகச் செயற்பட்டதன் விளைவாக, ஒரு இடத்தைத்தவிர குருநாகலில் உள்ள ஏனைய அனைத்து குளங்களையும் அண்டிய பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்த முடிந்துள்ளதாக கடற்றொழில் பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதற்கு மேலதிகமாக, வடமேல் மாகாண செயலாளர், பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தவிசாளர் திரு. சஞ்சீவ கருணாசாகர மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனம், சீ-நோர் (C-Nor) நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் இணைந்திருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன