அலங்கார மீன்பிடித்துறையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்: பண்ணையாளர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் இறக்குமதித் தடைகளை நீக்க பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை
நாட்டின் அலங்கார மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து, இத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்த விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நேற்று (18) அமைச்சில் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அலங்கார மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது, இத்துறையின் முன்னேற்றத்திற்காக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.
இங்கு கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், கடந்த காலங்களில் நிலவிய கட்டுப்பாடுகளால் இத்துறையில் இடம்பெற்ற சரிவுகளை தடுக்கும் வகையில் வெளிப்படையான புதிய இறக்குமதி நடைமுறை அமுல்படுத்தப்படும் என வலியுறுத்தினார். அதற்கமைய, வர்த்தகத் தேவைகளின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக மீன் வகைகளை இறக்குமதி செய்ய வர்த்தகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன், இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடைசெய்யப்பட்டுள்ள மீன் வகைகளின் பட்டியலைத் திருத்தும்போது, நிபுணர் குழுவிடம் தமது நியாயங்களை முன்வைக்க வர்த்தகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக ‘Ditwah’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு அளவிலான அலங்கார மீன் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. ஏற்பட்ட நஷ்டங்களைக் கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 75,000 ரூபா மற்றும் 50,000 ரூபா என்ற அடிப்படையில் நிதி உதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். மீன் உணவுகளைக் கூட கொள்வனவு செய்ய முடியாமல் பொருளாதார நெருக்கடியிலுள்ள பண்ணையாளர்களுக்கு இது பெரும் பக்கபலமாக அமையும்.
இத் தொழிற்துறையை தொடர்ந்து கண்காணித்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வர்த்தகர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் NAQDA நிறுவனத்தின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய மற்றும் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எச்.எஸ். ஹதுரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






