15 October 2026
யான் ஓயா நீர்த்தேக்கத்தில் கூண்டு மீன் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் அமோக அறுவடையும் ரூ. 7 இலட்சத்தை நெருங்கும் வருமானமும்...
தேசிய மீன் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) யான் ஓயா நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கூண்டு மீன் உற்பத்தி முன்னோடித் திட்டம், தற்போது வெற்றிகரமான அறுவடை மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இலங்கை மக்களின் விலங்குப் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மீன் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில், வருடாந்த மீன் விநியோகப் பற்றாக்குறையைப் இல்லாதொழிப்பதற்கு தேவையான மேலதிக 300,000 மெட்ரிக் தொன் மீன் தேவையை பூர்த்தி செய்வதற்கு இம்முறைமை ஒரு நிலையான மாற்றீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுவிப்பது நன்னீர் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பிரதான முறையான போதிலும், அதைவிடக் கூண்டுகளுக்குள் கட்டுப்பாடான சூழ்நிலையில் மீன்களை வளர்ப்பதன் மூலம் அறுவடையையும் வளர்ச்சியையும் மிகவும் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பது இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்முன்னோடித் திட்டத்தின் முதற்கட்டமாக, 2026 மே 18 ஆம் திகதி 15,000 மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டன. அதன்பின்னர், 50 கிராமுக்கும் அதிகமான எடையுடைய 3,600 உயர் மீன் குஞ்சுகள் கடந்த ஜூலை 30 ஆம் திகதி மீன் உற்பத்திக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வட்டக் கூண்டில் விடப்பட்டன.
உண்ணக்கூடிய மீன்களை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் வட்டக் கூண்டு முறை பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது வரலாற்றுப் பதிவாகிறது.
இத்திட்டத்தின் அறுவடை இன்று (15) இடம்பெற்றதுடன், அதில் 2,996 மீன்களிலிருந்து மொத்தம் 1,202 கிலோகிராம் அறுவடையை முதல் தடவையிலேயே பெற முடிந்தமை ஒரு சிறப்பு அம்சமாகும். இந்த வெற்றிகரமான அறுவடை மூலம் ரூ. 696,000 வருமானம் ஈட்ட முடிந்துள்ளதுடன், இது போன்ற திட்டங்கள் வர்த்தக ரீதியிலான சாத்தியக்கூறுகளைத் தெளிவாக விளக்குகின்றன.
அறுவடை செய்யப்பட்ட மீன்களில் 500 கிலோகிராம் மீன்களை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் கொள்முதல் செய்ததுடன், மேலும் 660 கிலோகிராம் மீன்களை தனியார் மீன் விற்பனையாளர் ஒருவர் கொள்முதல் செய்துள்ளார். இந்த விற்பனை ஒரு கிலோகிராம் 600 ரூபாய் என்ற விலையில் இடம்பெற்றுள்ளது.
பாரம்பரிய நன்னீர் மீன் உற்பத்தி முறைகளுக்கு மேலதிகமாக, புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் இந்த மாதிரித் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனுபவங்கள், எதிர்காலத்தில் பொருத்தமான நீர்த்தேக்கங்களில் இம்முறைமையை விரிவுபடுத்துவதற்குப் பெரும் பக்கபலமாக அமையும்.
இந்த விசேட அறுவடை நிகழ்வில் தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய, ஹொரொவபத்தன பிரதேச சபையின் தலைவர் தரங்க பிரசாத் ஜயவர்தன, நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் (விரிவாக்கம்) ஆர். எச். பொத்துவில உள்ளிட்ட அதிகாரிகளும், யான் ஓயா மீனவ சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.












