Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
28 September 2026
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியனுக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சிநேகபூர்வமான சந்திப்பின்போது, இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், கடற்றொழில் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இலங்கையின் கடல்சார் உற்பத்திகளுக்கான ரஷ்ய சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் தரமான கடல்சார் உற்பத்திகளான டுனா, இறால் மற்றும் நண்டு உள்ளிட்டவற்றை ரஷ்ய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை, ரஷ்ய சந்தைக்கு மீன் மற்றும் கடல்சார் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச தரநிலைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழ் நடைமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் காணப்படும் நடைமுறைச் சவால்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் ஆழ்க்கடல் மீன்பிடித் துறையை நவீனமயமாக்குவதற்காக ரஷ்யாவின் நவீன தொழில்நுட்பம், மீன்பிடிப் படகுகள் மற்றும் தேவையான உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தினார். குறிப்பாக, மீனவர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைத்து, மீன்பிடி உற்பத்திகளின் தரத்தைப் பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்குதல், குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் உற்பத்திகளைக் கையாள்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் போன்ற துறைகளில் ரஷ்யாவின் முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதனுடன், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் கவனம் செலுத்தினார். குறிப்பாக, இலங்கையின் கடல்சார் உற்பத்திகளுக்கான ரஷ்ய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கடற்றொழில் துறையில் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் காணப்படும் மீன் வளங்களை விஞ்ஞான ரீதியாக மதிப்பீடு செய்தல், நிலையான மீன்பிடி முறைகளை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் வளங்களைப் பாதுகாத்தல் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்றொழில் துறை அதிகாரிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சிகள், அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கான ரஷ்ய ஒத்துழைப்பைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. கடற்றொழில் துறையில் நவீன தொழில்நுட்பப் பயன்பாடு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, 1948ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சர்வதேச அரங்கிலும் இலங்கை பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட காலகட்டங்களிலும் ரஷ்யா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பானது கடற்றொழில் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதில் ரஷ்ய அரசாங்கம் காட்டிவரும் ஆர்வத்தை வரவேற்ற அமைச்சர், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நடைமுறை ரீதியாக மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. பீ.கே. கோலித்த கமல் ஜினதாசவும் கலந்துக் கொண்டார்.