20 September 2026
சீனாவுடனும் தெற்காசிய நாடுகளுடனும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை தயார் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கடல்சார் அறிவியல், கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, நீலப் பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு, மனிதவள மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகால மற்றும் நடைமுறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சீன இயற்கை வள அமைச்சின் கடல்சார் அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெக்சுன் வேய் (Zexun Wei) அவர்களின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனாவுக்குச் சென்ற அமைச்சர், குயிங்தவோ (Qingdao) மேற்கு கரையோரப் புதிய பிராந்தியத்தில் செப்டெம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெற்ற “சீனா – தெற்காசிய நாடுகளின் கடல்சார் ஒத்துழைப்பு மன்றத்தின்” (China–South Asian Countries Marine Cooperation Forum) கடல்சார் ஒத்துழைப்பு கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா, இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில், காலநிலை மாற்றம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்சார் அனர்த்தக் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை, கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடன், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (NARA) தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி, பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.எச்.எம்.எல். அமரலால் மற்றும் கடல்சார் அறிவியல் பிரிவின் பிரதான ஆராய்ச்சியாளர் கலாநிதி டபிள்யூ.என்.சி. பிரியதர்ஷனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
உலகின் முன்னணி கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்கும் சீனா, நீண்டகால அனுபவம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், முதலீடு, முறையான திட்டமிடல் மற்றும் துறைசார் கொள்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதுடன், அவை இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு முக்கியமான முன்மாதிரிகளையும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் வழங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் எதிர்கால கடற்றொழில் அபிவிருத்தி என்பது மீன் வளங்களின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதாக அமையக்கூடாது. மாறாக, கடற்றொழிலுக்கு மேலதிகமாக நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கடல்சார் தொழில்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலம் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
அதேவேளை, இலங்கை தனது பிராந்திய அணிசேராக் கொள்கையைப் பேணிக்கொண்டு, கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடல்சார் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி அவற்றின் பொருளாதாரப் பெறுமதியை அதிகரிப்பதுடன், கரையோர மக்களின் வாழ்வாதாரங்களையும் தொழில் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்காக நவீன கடற்றொழில் உட்கட்டமைப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், முதலீடு, புத்தாக்கம், பெறுமதி சேர்த்தல் மற்றும் திறன்மிக்க மனித வளம் ஆகியவை அத்தியாவசியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியப் பெருங்கடலின் மத்தியில் அமைந்துள்ள இலங்கைக்கு, பிராந்தியத்தின் முக்கிய கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் கடல்சார் பொருளாதார மையமாக முன்னேறுவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் காணப்படுவதாகவும், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் சமநிலையைப் பேணிய நிலையான அபிவிருத்தி அணுகுமுறையைப் பின்பற்றுவது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம், கடல்சார் மாசுபாடு, கடல்சார் வளங்களின் சீரழிவு மற்றும் சட்டவிரோதமான, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் நடவடிக்கைகள் (IUU Fishing) போன்ற சவால்கள் எந்தவொரு ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாதவை என்பதால், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆராய்ச்சி, தரவுப் பரிமாற்றம், கடல்சார் கண்காணிப்பு, தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம் மற்றும் அனர்த்தங்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவது அத்தியாவசியமானது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சீனாவும் இலங்கையும் கடற்றொழில் முகாமைத்துவத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் கொள்கைகள், சட்டகங்கள் மற்றும் தொழில்நுட்ப அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சீனாவின் கடற்றொழில் சட்டத்தில் (Fisheries Law) மேற்கொள்ளப்பட்ட விரிவான மறுசீரமைப்பைத் தொடர்ந்து புதிய சட்ட ஏற்பாடுகள் 2026 மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதேவேளை, இலங்கையிலும் 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வளங்கள் சட்டத்திற்குப் பதிலாக புதிய கடற்றொழில் சட்டமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு சீனாவினால் வழங்கப்பட்டு வரும் பயிற்சித் திட்டங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அறிவுப் பரிமாற்றம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஆதரவு ஆகியவற்றுக்கு சீனாவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பை நீலப் பொருளாதாரம், கடல்சார் அறிவியல், நவீன கடற்றொழில் தொழில்நுட்பம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் கடல்சார் துறைகளுடன் தொடர்புடைய மனிதவள மேம்பாடு உள்ளிட்ட புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மேலதிகமாக, செப்டெம்பர் 17ஆம் திகதி கிங்டாவோவில் நடைபெற்ற “2026 சர்வதேச கடல்சார் அபிவிருத்தி மன்றத்திலும்” (2026 Global Ocean Development Forum) அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
நிலையான கடல்சார் பொருளாதார வளர்ச்சி, கடல்சார் தொழில்கள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புத்தாக்கங்கள், நீல நிதியியல் மற்றும் உலகளாவிய கடல்சார் ஆளுகை உள்ளிட்ட விடயங்கள் இந்த மன்றத்தில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்த நிகழ்வுகளின்போது “கடல் எம்மைப் பிரிப்பதில்லை – அது எம்மை இணைக்கிறது” என்ற கருத்தை முன்வைத்த அமைச்சர், கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதுடன், கடலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கான நிலையான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் எதிர்கால கடல்சார் ஒத்துழைப்பின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்புகள், கடல்சார் அறிவியல், தொழில்நுட்பம், கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, நீலப் பொருளாதாரம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்கால நடைமுறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்துள்ளன.







