Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
16 September 2026
இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் ஆரம்பமானது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடனும், இலங்கை-இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கடற்றொழில் அமைச்சின் வழிகாட்டலிலும், இலங்கையின் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான 10 நாட்கள் கொண்ட விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் 2026.09.15 (நேற்று) முதல் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் அமைந்துள்ள Vaikunth Mehta National Institute of Cooperative Management (VAMNICOM) நிறுவனத்தில் வெற்றிகரமாக ஆரம்பமானது.

இப்பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு VAMNICOM நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சுவ காந்தா மொஹாந்தி அவர்களின் தலைமையில், பயிற்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவி தர்மராஜன் உள்ளிட்ட பல அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இப்பயிற்சித் திட்டத்தின் ஊடாக இந்திய கூட்டுறவு இயக்கம் மற்றும் அதன் நடைமுறைச் செயல்பாடுகள் குறித்தும், உலகப் புகழ்பெற்ற “Amul Cooperative Movement” போன்ற நிறுவனங்களின் வெற்றிபெற்ற செயல்பாட்டு மாதிரிகள் குறித்தும் பயிற்சியாளர்களுக்கு விரிவான விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சித் திட்டத்தில் மாத்தறை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடல் மீனவ சமூகத்தினரும், புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நன்னீர் கிராமப்புற மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்றும் பங்கேற்றுள்ளனர். இதற்கு மேலதிகமாக, கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் கொள்முதல்) நடராஜா சிவலிங்கம், தேசிய மீனவர் சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் எல்.ஜி. அஜந்த குமார, கடற்றொழில் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 03 அதிகாரிகள் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபையை (NAQDA) பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் மாவட்ட நீர்வாழ் உயிரின அபிவிருத்தி விரிவாக்க அதிகாரி இனோகா பெரேரா உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Latest News