Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
09 September 2026
ஒலுவில் துறைமுகத்தை மீளச் செயற்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை - மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேன்தகு முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின்போது, துறைமுகங்களின் தற்போதைய நிலை, மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சுருக்கு வலைப் பயன்பாட்டுக்கான அனுமதிப்பத்திர விதிமுறைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகம் நீண்டகாலமாக மணல் படிவத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அலைகளின் வேகம், காற்றின் வேகம், கடல் நீரோட்டங்களின் தன்மை மற்றும் மணல் நகர்வு உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் போதுமான அறிவியல் மற்றும் முறையான சாத்தியக்கூறு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதமையே துறைமுகத்தின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

சுமார் நான்கு தசாப்தங்களாக துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், போதிய அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படாததன் காரணமாக துறைமுகத்தின் நுழைவாயிலில் பாரியளவில் மணல் படிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி ஆய்வுகள், கிடைக்கப்பெற்ற அறிவியல் தரவுகள் மற்றும் மீனவ சமூகத்தினரின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உரிய முறையில் திட்டமிடப்படாததன் விளைவாக, தற்போது வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில், துறைமுகப் பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்றி அதனைப் பெறுவதில் அவை அதிகளவில் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த மணலில் முக்கியமான கனிமப் பொருட்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால், தற்காலிகத் தீர்வுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, ஒலுவில் துறைமுகப் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிலையானதும் விஞ்ஞானப்பூர்வமானதுமான தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்காக ஜனாதிபதி அலுவலகம், சுற்றாடல் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பின் ஊடாக தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஒலுவில் துறைமுகத்தை எதிர்காலத்தில் தேசிய மீன் உற்பத்திக்கும் பிராந்திய மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில் எவ்வாறு மீளச் செயற்படுத்துவது என்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், மீன்பிடித் துறைமுகப் பகுதியை தனியாகப் பிரித்து புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்கி, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பாரியளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் முதற்கட்டப் பணிகளின் கீழ் 300 மில்லியன் ரூபாய் செலவில் படகுகள் வந்து இறங்குவதற்கான இறங்குதுறை அமைக்கும் பணிகள் ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் கந்தர மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 650 மீற்றர் நீளமுடைய அதிநவீன தடுப்பு அணையுடன் கூடிய பாரிய மீன்பிடித் துறைமுகமாக இது அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செப்டெம்பர் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கலமெட்டிய மற்றும் அம்பலாங்கொட மீன்பிடித் துறைமுகங்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகள் ஒக்டோபர் மாதத்தின் மத்தியிலிருந்து மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, திருகோணமலை மற்றும் வட மாகாணப் பகுதிகளில் சுருக்கு வலை பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.

தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முகவரகம் NARA-வின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே சுருக்கு வலைப் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மீன்களின் இனப்பெருக்கத்தைப் பாதுகாப்பதுடன், சிறிய அளவிலான மீன்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்திலேயே இவ்விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, சுருக்கு வலையின் துளைகளின் அளவு குறைந்தபட்சம் 1.5 அங்குலமாக இருக்க வேண்டும் என்பதுடன், வலையின் மொத்த நீளம் 225 மீற்றருக்கு மேல் இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 25 மீற்றருக்கும் குறைவான கடல் ஆழம் கொண்ட பகுதிகளில் மட்டுமே இவ்வலையைப் பயன்படுத்த முடியும் என்பதுடன், காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலான பகல் நேரத்தில் மட்டுமே சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 174 சுருக்கு வலை அனுமதிப்பத்திரங்களும், வட மாகாணத்தில் 68 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வனுமதிப்பத்திரங்கள் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதுடன், அவற்றைத் தொடர்ந்து புதுப்பிப்பதற்கு முன்னர் உரிய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரத்தை தந்தையிடமிருந்து மகனுக்கோ அல்லது தனிப்பட்ட முறையில் வேறு ஒருவருக்கோ நேரடியாகக் கைமாற்றுவதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் இல்லை எனவும் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார். அனுமதிப்பத்திரம் தொடர்பான புதிய கோரிக்கைகள் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள், உரிய கள ஆய்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிசீலனைகளுக்கு உட்பட்டே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையும், கடல் வளங்களை எதிர்கால சந்ததியினருக்காக நிலைபேண்தகு முறையில் பேணுவதையும் ஒருங்கிணைத்த வகையில், துறைமுக அபிவிருத்தி மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Latest News