09 September 2026
COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள். டிஜிட்டல் மாற்றம், தரவு முகாமைத்துவம் மற்றும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை வலியுறுத்தல்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்று வரும் மீன்வளக் குழுவின் 37ஆவது அமர்வில் (COFI37), இலங்கை தனது தேசிய மீன்வளக் கொள்கை முன்னுரிமைகள், கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவம், சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த முக்கிய சர்வதேச அமர்வில், உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பின் நிலைமை தொடர்பான SOFIA 2026 அறிக்கை, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடியை கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், சிறிய அளவிலான மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு ஆதரவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன.
இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச கலந்துகொண்டு, இலங்கையின் மீன்வளத்துறையின் தற்போதைய நிலை, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடுகளையும் முக்கிய கருத்துக்களையும் முன்வைத்தார்.
அத்துடன், வங்காள விரிகுடா அரசுகளுக்கிடையேயான அமைப்பான BOBP-IGO-வின் தலைமைப் பொறுப்பிலும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
வளரும் நாடுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை நவீனமயப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் முக்கிய பங்காற்றுவதாக செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச சுட்டிக்காட்டினார். மீன்வளத் தரவுகளை அறிவியல் ரீதியாகச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் அவற்றின் அடிப்படையில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
FAO நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டுள்ள FishStat தரவுத்தளத்தின் முக்கியத்துவத்தை இலங்கை பாராட்டியதுடன், மீன்வள இருப்புகளின் நிலையை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவதற்கான Stock Assessment திறன்களை வளரும் நாடுகளில் மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மீன்வளத் துறையில் சேகரிக்கப்படும் தரவுகள் வெறுமனே புள்ளிவிபரங்களாக மட்டுப்படாமல், அவை தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் செயல்திறன் மிக்க கொள்கைகள் மற்றும் தீர்மானங்களாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக BOBP-IGO ஊடாக உறுப்பு நாடுகளுக்கிடையிலான அறிவுப் பகிர்வு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தரவு அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இலங்கையைப் பொறுத்தவரையில், சிறிய அளவிலான மீன்பிடித் தொழில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம், ஏற்றுமதி வருமானம் மற்றும் நீலப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.
சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலை வரையறுக்கும் போது, படகின் நீளம் அல்லது இயந்திரத்தின் இயங்திறன் போன்ற தொழில்நுட்ப அளவுகோல்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல், அதனுடன் தொடர்புடைய சமூக, பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான பரிமாணங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, வளரும் நாடுகளின் மீனவர்களின் உண்மையான வாழ்வாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட டொக்டர் பிரிட்ஜோஃப் நான்சென் மீன்வள இருப்பு மதிப்பீட்டு நடவடிக்கை இந்த ஆண்டு நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மீன்வளத் தரவுகளை மேலும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் சேகரிப்பதற்காக புதிய தரவுச் சேகரிப்புப் பிரிவொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணைக்குழு (IOTC) மற்றும் Vessel Monitoring System (VMS) உள்ளிட்ட கண்காணிப்பு மற்றும் தரவுச் சேகரிப்பு பொறிமுறைகளின் ஊடாக தேவையான தரவுகள் முறையாகச் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதுடன் மட்டுமன்றி, மீன்களைப் பிடித்த பின்னர் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கும் இலங்கை முக்கியத்துவம் அளித்து வருவதாக செயலாளர் குறிப்பிட்டார். குறிப்பாக, மீன் இறங்கு தளங்களில் குளிர்சங்கிலி வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைத்து, மீன்களின் தரத்தையும் சந்தை மதிப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என இலங்கை வலியுறுத்தியது. துறைமுக நாடுகளின் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தமான Port State Measures Agreement (PSMA)-இல் இலங்கை இணைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், IUU மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கான நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச தெரிவித்தார்.
IUU மீன்பிடியை கட்டுப்படுத்துவதில் காணப்படும் சட்ட மற்றும் நடைமுறை ரீதியான இடைவெளிகளை நிரப்புவதுடன், பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, BOBLME உள்ளிட்ட பிராந்தியத் திட்டங்களின் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பல்வேறு வகையான மீன்பிடி முறைகளும் சிறிய அளவிலான மீன்பிடிப் படகுகளும் அதிகளவில் காணப்படுவதால், மீன்பிடி வர்த்தகம், மானியங்கள் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான சர்வதேசக் கொள்கைகளை வகுக்கும் போது, அந்தப் பிராந்தியத்தின் தனித்துவமான சமூக, பொருளாதார மற்றும் மீன்பிடிச் சூழ்நிலைகளை கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை கேட்டுக்கொண்டது.
இதற்காக, FAO உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வளரும் நாடுகளுக்கு தொடர்ச்சியான தொழில்நுட்ப உதவி, திறன் மேம்பாடு, தரவு முகாமைத்துவம் மற்றும் கொள்கை உருவாக்கத்திற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உலகளாவிய மீன்வளத் துறையின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் அறிவியல் அடிப்படையிலான தரவு, நவீன தொழில்நுட்பம், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த அணுகுமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச COFI37 அமர்வில் வலியுறுத்தினார்.
COFI37 அமர்வின் ஊடாக உலகளாவிய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறையின் எதிர்காலக் கொள்கைத் திசைகளைத் தீர்மானிப்பதற்கான முக்கிய கலந்துரையாடல்களில் இலங்கை தனது அனுபவங்களையும் தேசிய முன்னுரிமைகளையும் முன்வைத்துள்ளதுடன், பிராந்திய மற்றும் சர்வதேச மீன்வள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அமர்வில் உலகின் 130 நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 800 முன்னணி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.







