04 September 2026
இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் இந்தியப் பயணம் – நிர்வாகம் மற்றும் பொருளாதார வலுவூட்டல் தொடர்பில் சிறப்புப் பயிற்சி
இலங்கையின் மீனவர் சங்கங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றின் நிர்வாக, செயற்பாட்டு மற்றும் பொருளாதார திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 10 நாள் சர்வதேச திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
“இலங்கையில் வலுவானதும் திறமையானதுமான மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி வலுப்படுத்துவதற்காக கூட்டுறவுச் சங்கங்களின் இந்திய களப்பயணம்” என்ற தொனிப்பொருளில் இப்பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இந்தியாவின் முன்னணி கூட்டுறவு முகாமைத்துவ நிறுவனமான வைகுண்ட் மேத்தா தேசிய கூட்டுறவு முகாமைத்துவ நிறுவனம் (VAMNICOM) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சித் திட்டம், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை 10 நாட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட அமைச்சின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் என். சிவலிங்கம், பணிப்பாளர் யசிந்தா குணவர்தன, உதவிப் பணிப்பாளர் எச். எம். எஸ். ஆர். பி. ஹேரத், தேசிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் எல். ஜி. அஜந்த குமார மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எச். பி. ஜி. எம். கே. ஆரியவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பில் அரசியல் ஆலோசகரும் அலுவலகத் தலைவருமான கலாநிதி சி. ராம்பாபு, அபிவிருத்தி ஒத்துழைப்பு இணை அதிகாரி குல்தீப் குமார் பஃப்னா, அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்ட அதிகாரி எஸ். மிதுரன் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரோஷிணி தோமஸ் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பயிற்சித் திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள், பயிற்சி நடவடிக்கைகள், அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடைய அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இப்பயிற்சித் திட்டத்தில் 20 பேர் கொண்ட குழுவொன்று பங்கேற்கவுள்ளது. இதில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் திணைக்களத்தின் மூன்று உத்தியோகத்தர்களும், குறித்த மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 17 மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்றனர். தேசிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளரும் இக்குழுவில் இடம்பெறுகிறார்.
இந்தியாவில் வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாக முறைகள், செயற்பாட்டு நடைமுறைகள், உறுப்பினர்களின் பங்கேற்பு, பொருளாதார வலுவூட்டல், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் நிறுவன ரீதியான திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இப்பயிற்சியின் மூலம் அனுபவப் பரிமாற்றம் மற்றும் களப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் இலங்கையின் மீனவர் சங்கங்களின் நிர்வாகத் திறனையும் பொருளாதார வலிமையையும் மேம்படுத்துவதுடன், மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகள் மற்றும் செயற்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இப்பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் மூலம் வருடாந்தம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 700 இலங்கையர்களுக்கு விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சிகள், வழமையாக வழங்கப்படும் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) பயிற்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுகின்றன.
பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையர்களின் அறிவு, திறன் மற்றும் தொழில்சார் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திறன் மேம்பாட்டு கட்டமைப்பின் கீழ், கூட்டுறவு, சுகாதாரம், தொழில் முனைவோர் மேம்பாடு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இலங்கையர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இலங்கையின் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு முதன்முறையாக இத்தகைய சர்வதேச மட்டத்திலான விசேட பயிற்சி வாய்ப்பு கிடைத்துள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கி, இலங்கை மீனவர் சமூகத்தின் திறன் மேம்பாட்டிற்காக இத்தகைய முக்கியமான வாய்ப்பை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச நன்றி தெரிவித்தார்.
இலங்கை – இந்திய நட்புறவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்தகைய திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கை மீனவர் சமூகத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











