Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
21 August 2026
மீன் வளங்களின் குறைவு, மீன் இனங்களின் உற்பத்தி மற்றும் வாழ்விட மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு

மீன் வளம் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முகவரகத்திற்கு (NARA) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், மீன்வளம் குறைவடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிவித்தார்.

“இந்த விடயம் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் பார்த்துள்ளேன். அதில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிகிறது” என அவர் குறிப்பிட்டார்.

மீன்வளம் குறைவதற்கு கடல் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மாசடைவு மற்றும் கடல் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையினை எல் நினோ (El Niño) நிலைமைகளுடன் தொடர்புடையதா என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகின் பல்வேறு கடல் பகுதிகளிலும் இதுபோன்ற மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கடலில் பாசி (Algae) அளவு குறைவடைவதால் ஒளிச்சேர்க்கைச் செயன்முறை பாதிக்கப்படுவதுடன், மீன் இனங்களின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான கடல் சூழலிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கடல் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக சில மீன் இனங்கள் ஆழமான கடற்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக பாரம்பரியமாக மீன்பிடிக்கப்படும் பகுதிகளில் மீன் வளம் குறையக்கூடும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நிலைத்தன்மையற்ற மீன்பிடி முறைகள் காரணமாக மீன் வளங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தினார். இவ்வாறான முறையற்ற மீன்பிடி முறைகள் மீன் வளங்களை பாதிக்கக்கூடும் என்பதை NARA மேற்கொண்ட முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மீன் வளங்களின் தற்போதைய நிலை, மீன் இனங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதற்கான காரணிகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு NARA-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கண்டறியப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மீன் வளங்களை பாதுகாப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்குமாறும் NARA-விடம் கோரப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையை கடற்றொழில் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Latest News