15 August 2026
மீனவர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் இளைப்பாறும், வலை திருத்தும் மண்டபங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, காரைதீவு மற்றும் நிந்தவூர் ஆகிய பகுதிகளில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக இளைப்பாறும், வலை திருத்தும் மண்டபங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று (14.08.2026) நடைபெற்றது.
மீனவர்களின் அன்றாட தொழில்சார் தேவைகளை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெரியநீலாவணையில் அமைக்கப்படவுள்ள மண்டபத்திற்காக 24 மில்லியன் ரூபாவும், காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மண்டபங்களுக்கு தலா 22 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மூன்று மண்டபங்களின் நிர்மாணப் பணிகளுக்காக மொத்தமாக 68 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்மண்டபங்கள் அமைக்கப்படுவதன் மூலம் மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை திருத்துவதற்கும் பராமரிப்பதற்கும், கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இடையில் ஓய்வெடுப்பதற்கும் தேவையான வசதிகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் மீனவர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதுடன், அவர்களின் தொழில்சார் சிரமங்களையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அரச அதிகாரிகள், கடற்றொழில் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதுடன், அவர்களின் தொழிலை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












