Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
14 August 2026
மட்டக்களப்பு மீன்பிடித் துறையை மேம்படுத்த விரிவான திட்டங்கள் – அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (12) பிற்பகல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

மாவட்டத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதுடன், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், மீனவர்களுக்கான கட்டிடங்களை அமைத்தல், இறங்குதுறைகளில் மின்விளக்குகளை பொருத்துதல், செயலிழந்துள்ள ஐஸ் தொழிற்சாலையை மீள இயங்கச் செய்தல், மீனவர் வீதிகளை அமைத்தல், குட்டைகளில் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்திலுள்ள சிறிய குளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், மீனவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் நிலையங்களை அமைத்தல், கடற்றொழில் நடவடிக்கைகளில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு காணுதல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் மீன்பிடி வளங்களைப் பாதுகாத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல், மீன்பிடி உபகரணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், கடல் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மீன்பிடி வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

மீனவர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்ததுடன், அவற்றுக்கு நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Latest News