14 August 2026
திருகோணமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண உதவிப் பணிப்பாளர், மாவட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்படையினர், பொலிஸார் மற்றும் மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு துறைசார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.
மேலும், மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகள் நீண்டகாலம் தீர்வின்றி தொடராமல், அவற்றின் முன்னேற்றத்தை முறையாகக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது, கடந்த மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. குறிப்பாக எரக்கண்டி களப்பு பகுதியில் மீன்பிடி மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தல், தென்னமரவாடி துறைமுகம் மற்றும் லங்காபட்டுன பகுதிகளுக்கான புதிய பொலிஸ் காவல்நிலையங்கள் அமைத்தல், துறைமுகப் பகுதிகளில் மீன்பிடிப் படகுகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
கோட்பே மீன்பிடித் துறைமுகத்தின் Buffer Zone பகுதியை விடுவித்தல், துறைமுக வளாகத்தில் காணப்படும் அகற்றப்பட்ட 10 படகுகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையும் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்பட்டது. காற்று அதிகமாக வீசும் காலங்களில் துடுப்புப் படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குச் செல்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, துறைமுகப் பகுதிக்குள் குறிப்பிட்ட எல்லைக்குள் சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கடற்படையுடன் மேலும் கலந்துரையாடி இறுதி முடிவொன்றை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அதேபோன்று, புல்மோட்டை பிரதேச மீனவர்களின் மாடி வலை மீன்பிடி நடவடிக்கைகள், குறிப்பிட்ட தூர எல்லைக்குள் சிறிய படகுகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, பலநாள் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் ஆவண மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.
மீனவர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த சேவை மையமொன்றை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல், மீன்பிடி இறங்குதுறை அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், இக்பால் நகர் மீன்பிடி இறங்குதுறை காணிப் பிரச்சினை, கோட்பே மீன்பிடித் துறைமுகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், NAQDA நிறுவனத்தில் மீன்பிடிப் பரிசோதகர்கள் மற்றும் பௌதிக வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
சுற்றுலா வலயங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் மீன்பிடித்துறைக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளை அடையாளம் கண்டு, இரு துறைகளினதும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையும் உரிய கவனமின்றி விடப்படக்கூடாது எனவும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் பொறுப்பான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், கடற்றொழில் துறையின் அபிவிருத்தி என்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துறைமுக முகாமைத்துவம், சட்டவிரோத மீன்பிடி கட்டுப்பாடு, சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழில் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மீனவர்கள் தங்களது நிர்வாகப் பணிகளை இலகுவாக நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைந்த சேவைகள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உரிய அதிகாரிகளின் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
திருகோணமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கடற்றொழில் அமைச்சு மாத்திரமன்றி, துறைமுக அதிகாரசபை, கடற்படை, பொலிஸ், NAQDA, NARA, இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மீனவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றின் முன்னேற்றம் அடுத்தடுத்த மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட கடற்றொழில் சமூகத்தின் நீண்டகால மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கு துரிதமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்காக அரச நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படும் வகையில் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.


















