05 Auguest 2026
புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி: ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பு தொடர்ந்தும் அபாயகரமானது - கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (05) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைய, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் காலநிலை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் நிலவிய பலத்த காற்று தற்போது ஓரளவுக்குத் தணிந்துள்ளது. எனவே, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அக் கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமானது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இன்னும் உகந்த நிலை காணப்படாததால், மறு அறிவித்தல் வரை அப் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காகப் புறப்படுவதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் எந்நேரமும் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதால், தொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவர்களும் கண்டிப்பாக உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிந்திருக்குமாறு திணைக்களம் வலியுறுத்துகின்றது.
நிலவும் காலநிலை குறித்து வருங்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறும் அனைத்து மீனவ சமூகத்தையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
Share




