04 August 2026
நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதி மேலும் கொந்தளிப்பு: புத்தளம் முதல் பொத்துவில் வரை சிறு மற்றும் ஒருநாள் மீன்பிடிக் கலன்களுக்குத் தற்காலிகத் தடை

நாட்டைச் சூழவுள்ள கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது நிலவும் சீரற்ற காலநிலை மாற்றங்கள் கடற்றொழில் நடவடிக்கைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இந்த அவசர அறிவிப்பை விடுக்கின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைக்கால முன்னறிவிப்புகளின்படி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாகக் கடல் அலைகள் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரை உயரமாக எழும்பும் அபாயம் காணப்படுகின்றது.

இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கரையோரமாகத் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள், வெளிப்பக்க இயந்திரம் பொருத்தப்பட்ட சிறிய மீன்பிடிப் படகுகள் மற்றும் ஒருநாள் படகுகள் தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் காற்றின் வேகம் மற்றும் கடலின் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்பாகத் தொழில் செய்யக்கூடிய சூழல் இருந்தால் மாத்திரமே கடலுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பதாகத் தோன்றினால், உயிர்ப் பாதுகாப்புக் கருதி தொழிலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.

விசேடமாக, கடற்றொழிலுக்காகப் புறப்படுவது முதல், கடலில் தொழிலில் ஈடுபடும் நேரம் மற்றும் மீண்டும் பாதுகாப்பாகக் கரை திரும்புவது வரை முழுமையான காலப்பகுதியிலும் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிந்திருப்பது கட்டாயம் எனத் திணைக்களம் வலியுறுத்துகிறது. இது கடற்றொழில் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின்படி ஒரு சட்டப்பூர்வத் தேவையாகும் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளதால், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றால் அவ்வப்போது வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தீவிரமாக அவதானிக்குமாறும், தமது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறும் அனைத்து மீனவ சமூகத்தினரையும் திணைக்களம் தயவுடன் கேட்டுக்கொள்கிறது.

Share

Latest News