01 August 2026
🟥 Update 6.20 P.M. கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்கள் தெற்கு நோக்கி நகர்கின்றன: மீன்பிடிக் கலன்களுக்கு அவசர எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே அமைந்துள்ள கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்றுக் கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாகத் தகவல் பதிவாகியுள்ளது. எனவே, இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அனைத்து மீன்பிடிக் கலன்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கொள்கலன்கள் வடக்கு அட்சரேகை 06° 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079° 32′ இற்கு அருகாமையிலுள்ள கடல் பரப்பிலேயே விழுந்துள்ளன. நிலவும் காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்டத்தின் திசைக்கு அமைய, இக்கொள்கலன்கள் தற்பொழுது சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேரூவளை ஊடாக காலி வரையான கடற்பரப்பை நோக்கித் தெற்கு திசையில் அடித்துச் செல்லப்படக்கூடிய அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பேருவளை ஊடாக காலி வரையான தெற்குக் கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது அப்பகுதியூடாகப் பயணிக்கும் அனைத்து மீன்பிடிக் கலன்களும் இவ்விடயம் குறித்து அதீத விழிப்புடன் செயற்பட வேண்டும். கடலில் மிதக்கும் இக்கொள்கலன்கள் படகுகளுடன் மோதுவதால் பாரிய விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதால், கலன்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

கடலில் மிதக்கும் இக்கொள்கலன்களை யாரேனும் கண்டால், அது குறித்து உடனடியாகக் கடற்றொழில் திணைக்களத்தின் தொடர்பாடல் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மீனவர்களையும் திணைக்களம் தயவுடன் கேட்டுக்கொள்கிறது.

Share

Latest News