01 August 2026
சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பான நிலைமை காரணமாக விபத்துக்குள்ளான மற்றும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து பாரிய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த, நேற்று இரவு கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் தொழிலுக்குச் சென்ற சில படகுகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, சிலாபத்திலிருந்து தொழிலுக்குச் சென்ற OFRPA 8108 CHW என்ற படகு இரண்டு மீனவர்களுடன் இதுவரை காணாமல் போயுள்ளது. மேலும், நீர்கொழும்பிலிருந்து சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், அதில் ஒரு படகு கற்பாறையில் மோதி முழுமையாகச் சேதமடைந்துள்ளது. நீர்கொழும்பிலிருந்து OFRP-A-5277 NBO என்ற படகில் சென்ற கடுபிடிகே பிரசாத் மெக்மில்லன் பெர்னாண்டோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது உடல் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகில் இருந்த மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. விபத்துக்குள்ளான மற்றைய நீர்கொழும்பு படகில் இருந்த இரு மீனவர்களும் வேறொரு படகின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்த நிலைமை குறித்துக் கவனம் செலுத்திய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இலங்கை விமானப்படையின் விசேட கண்காணிப்பு விமானம் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கடற்படைக் கப்பல்களும் அப்பிரதேசங்களில் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அத்துடன் பிரதேச மீனவர்களும் தமது படகுகள் மூலம் இந்தத் தேடுதல் நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.
கடலில் மிதக்கும் கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மாலைதீவிலிருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி வந்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே 17 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார். இந்த வெற்றுக் கொள்கலன்கள் தற்போது கடலில் மிதந்து கொண்டிருப்பதால், மீனவர்களின் படகுகள் அவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. எனவே, இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இது தொடர்பாக உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிலவும் அபாயகரமான காலநிலையைக் கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், தற்போது கடலில் உள்ள படகுகள் உடனடியாகப் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறும் அமைச்சு மீண்டும் மீனவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Share



